அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை கடற்படை தரப்புக்கும் இடையே கடற்படை தலைமையகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றிருக்கிறது.

 


அவுஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கைக்கான கூட்டு முகமை பணிக்குழுவின் தளபதி ஜஸ்டின் ஜோன்ஸ் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஆணையத்தின் தூதுக்குழுவினர் இலங்கை கடற்படை தளபதி பிரியந்த பெராராவை சந்தித்து உரையாடி இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 3ம் திகதி  இந்தச் சந்திப்பு இலங்கை கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றிருக்கிறது.

இந்தச் சந்திப்பின் போது இருத்தரப்பு நலன்கள் குறித்து உரையாடப்பட்டிருக்கிறது. முக்கியமாகக் கடல்சார் சவால்களை ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் போது இலங்கைக்கான அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர், அவுஸ்திரேலிய தூதரக உயர் அதிகாரிகள், இலங்கை கடற்படை தளபதிக்கான உதவி அதிகாரி கோசல வர்ணகுலசூரிய உடன் இருந்ததாக இலங்கை கடற்படையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி படகு வழியாகப் பல இலங்கையர்கள் சென்று வரும் நிலையில், கடல் வழியிலான சட்டவிரோத புலம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அவுஸ்திரேலிய தரப்பு தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இவ்வாறான சூழலில் இருநாட்டுக் கடற்படைகள் இடையில் நடந்த இச்சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகிறது.