இரண்டு வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்?

 



மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும் இருவருக்கான வாக்கெடுப்பு நிலையம் அமைப்பதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மாந்தீவானது நாலாபக்கமும் நீரினால் சூழப்பட்டிருக்கும் இடம் என்பதனால் வாக்கெடுப்பு நிலையத்திற்கான விசேட போக்குவரத்திற்காக இயந்திரப்படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிரேஷ்ட  தலைமை அதிகாரி மற்றும் கனிஷ்ட தலைமை அதிகாரி, முகாமைத்துவ உதவியாளர், பொலிஸ் என ஆளணியினர் நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொதுவான வாக்கெடுப்பு நிலையத்தில் பின்பற்றப்படும் சகல நடைமுறைகளும் இங்கு பின்பற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாக்கெடுப்பு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணும் நிலையமான புதூர் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் வாக்கு எண்ணல் நடைபெறவுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.