மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்துடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் தன்மைக் கண்காணிப்பு மற்றும் தகவல் நிலையம் (CAMID) மற்றும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கான அமைப்பு (YMCA) ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் திட்டச் சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல் நிகழ்வு அண்மையில் (02) இடம்பெற்றன.
இதன்போது ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட கொடுவாமடு, பங்குடாவெளி, மயிலவெட்டுவான், வேப்பவெட்டுவான், கரடியனாறு, மரப்பாளம், கித்துள், உறுகாமம், கோப்பாவெளி, பெரிய புல்லுமலை, மங்களகம, ஈரளக்குளம், ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கின்ற 135 மாற்றுத்திறனாளிக் குடும்பங்களுக்கு தலா 10000.00 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் கித்துள் கிராம உத்தியோகத்தர் அலுவலத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேசத்தின் சமூக சேவை பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எம். றியாழ் மற்றும் கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டனர்.