தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சஜித் பிரேமதசவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது அவர்களை நிராகரித்து வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு ஆரயம்பதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றது. குறித்த கூட்டம் நிறைவு பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வெளியேறிய போது ஊடகவியலாளர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்ததும் பதில் சொல்ல மறுத்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் தன்னுடைய தலைமையில் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மேடைகளில் பிரசாரம் செய்கின்ற எதிர்க்கட்சித் தலைவர், பிராந்திய ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்றமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர் கட்சித் தலைவர் இன்று நடந்து கொண்ட விதம் தொடர்பாக ஊடகவியலாளர் மத்தியில் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதுமட்டுமன்றி, இவ்வாறு ஊடகவியலாளர்களுடன் நடந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் அதிபர் ஆனால் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவர்.
சிறுபான்மையான தமிழினத்திற்கு எவ்வாறான தீர்வுகளை வழங்குவார் என்ற
சந்தேகங்களும் எழும்பியுள்ளன.
மேடைகளில் ஏறி வீரவசனம் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிராந்திய
ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றது ஜனநாயகத்தின் நான்காவது
தூணான ஊடகத்துறைக்கு அவர் மதிப்பளிக்கும் விதம் குறித்தும் பாரிய
சந்தேகத்தை எழுப்பியுள்ளது.