.போலியான ஆவணங்களை தயாரித்து அரச காணிகளை அபகரிக்கப்படுகின்றன

 


வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில அரச அதிகாரிகள் போலியான ஆவணங்களை தயாரித்து அரச காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட காணி கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

சவுக்கடி பகுதியில் காணியற்ற மக்கள் அரச காணிகளில் குடியேறமுற்பட்ட நிலையில், பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டது.

சவுக்கடி பகுதியில் பெருமளவான மக்கள் காணியற்று உள்ள நிலையில் அங்குள்ள அரச காணிகளை தனவந்தர்கள் பெருமளவில் அபகரித்துவரும் நிலையில், காணியற்ற மக்கள் தொடர்ந்தும் காணியற்ற மக்களாகவே இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள் நேற்று மாலை அப்பகுதியில் போராட்டம் நடத்திய நிலையில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

குறித்த பகுதியில் நீண்டகாலமாக காணி அபகரிப்புகள் பெருளமவில் நடைபெற்றுவரும் நிலையில் அதனை தடுக்க முனையாதவர்கள் தாங்கள் இருப்பதற்கு காணிகளை அடைக்கமுனையும்போது தங்களை கைதுசெய்ய முனைவதாக மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

ஏவ்வாறாயினும், தமக்கான காணிகளை பெற்றுத்தர அதிகாரிகள், அரசியல்வாதிகள் முயற்சிகளை செய்யவேண்டும் என மக்கள் இங்கு  கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், அரச காணிகளை பாதுகாப்பதற்கு உரியி அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட கூட்டத்தைக் கூட்டி, காணி மாபியாக்கல் தொடர்பான விவரங்களை வெளியிடப்போவதாகவும் காணிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உறுதியளித்தார். (N)