கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள்!!






பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாய் திகழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேரோடும் ஆலயமென பெயர் பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

உலகநாச்சி அம்மையாரால் பூஜிக்கப்பட்ட ஆலயமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகளில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு சாம பூசையிலும் கலந்துகொண்டனர்.

சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

பூசை வழிபாடுகளில் கலந்துகொண்ட பக்த அடியார்கள் நெய் விளக்கேற்றியும், கற்பூரச் சட்டி ஏந்தியும், வில்வ இலைகளால் சிவலிங்கப்பெருமானை பூஜித்தும் தங்களது நேர்த்திகளை நிறைவேற்றியதுடன், கண் விழித்து சிவபுராணத்தினை ஓதி, ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து பக்திபூர்வமாக மகா சிவராத்திரி விரதத்தை அனுட்டித்தனர்.