கடன் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


சீனா, இந்தியா, சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி7 நாடுகளின் பங்குபற்றுதலுடன் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கடன் தொடர்பான வட்டமேசை மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய ஜி20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஜி 20 குழுவின் தற்போதைய தலைவரான இந்தியா ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படவுள்ளதுடன், ஜி20 நிதி அதிகாரிகள் எதிர்வரும் 23 முதல் 25 ஆம் திகதி வரை வட்டமேசையின் நேரடி கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

வட்டமேசையில் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் துறை பங்கேற்பாளர்களின் பாரிஸ் கிளப் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

பாரம்பரிய கடனாளிகள் முதல் பணக்கார பொருளாதாரங்களில் புதிய கடன் வழங்குபவர்கள் வரை, அத்துடன் கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகள் மற்றும் தனியார் துறையை ஒன்றிணைப்பதே வட்டமேசை மாநாட்டின் நோக்கம் என்று நாணய நிதியம் அறிவித்துள்ளது.