அவுஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள சிறு தீவு நாடான நவுருவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகள் இருவர் உதடுகளைத் தைத்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
கடந்த ஜூலை 2013 முதல் அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக நுழைய முயன்றவர்களை சிறை வைப்பதற்கான அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாம்கள்
நவுருத்தீவிலும் பப்பு நியூ கினியா தீவிலும் செயல்பட்டு வருகின்றன. இண்றைய நிலையில் சுமார் 150 அகதிகள் நவுருவிலும் பப்பு நியூ கினியாவிலும் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளாக மேலாக முகமது சோபிகுல் இஸ்லாம், முகமது காய்யம் எனும் இரு அகதிகள் நவுருத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
“நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம். எங்களது உதடுகளை மூடிக்கொண்டதால் உண்பதையும் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திவிட்டோம். எங்களுக்கு மருத்துவ சிகிச்சையும் சுதந்திரமும் கிடைக்கும் வரை நாங்கள் உண்ணவோ தண்ணீர் அருந்தவோ போவதில்லை,” என வாடஸ் அப் வழியாக சோபிகுல் இஸ்லாம் அல்ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.
தாய்நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தலான சூழல் காரணமாக அவுஸ்திரேலியாவில் கடந்த 2013ம் ஆண்டு
இவர்கள் இருவரும் தனித்தனியே தஞ்சமடைந்திருக்கின்றனர். அவுஸ்திரேலிய கடற்படையால் இவர்கள் படகுகள் இடைமறிக்கப்பட்டு நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
“நவுருவில் நாங்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறோம்… இங்குள்ள மக்கள் அகதிகளை விரும்புவதில்லை. அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள்,” என தங்களது நிலையை சோபிகால் இஸ்லாம் எடுத்துக் கூறியுள்ளார்.
நவுருவில் பிராந்திய பரிசீலனையை (கடல் கடந்த தடுப்பு) நடத்துவதில் ஆஸ்திரேலியா உறுதியுடன் இருக்கிறது எனக் கூறியுள்ளார் அவுஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர்.
அத்துடன், அத்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கான வழிகள் உள்ளன என்றும் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுபவர்களை அவுஸ்திரேலியாவுக்கோ தைவானுக்கோ மாற்றுவதற்கான வழிமுறைகள் நடைமுறையில் இருப்பதாகவும் உள்துறை பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
நவுரு, பப்பு நியூ கினியாவில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு உடனடியாக கொண்டு வருவதற்கான மசோதாவை அண்மையில் அவுஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சி முன்வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.