மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பேடன் பவலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 


 சாரணியத்தின் தந்தை பேடன் பவலின் 66வது பிறந்த தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு இன்றைய தினம் உலகளாவிய ரீதியில் சாரணியர்களினால்
விசேட நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பேடன் பவலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும்
விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தன்னலத்திற்குப் பதிலாக பிறர் நலனை மனதில் வைத்து உலக சகோரத்துவத்தின் மூலம் சிறுவர்களின் ஒழுக்கத்தையும் ஆரோக்கியத்தையும் அபிவிருத்தி செய்து
நாட்டிற்கும் தேசத்திற்கும் பயன்படக் கூடிய, சிறந்த உத்தமர்களாக்குவதற்காக பேடன் பவலினால் உருவாக்கப்பட்டதே சாரணிய இயக்கமாகும்.
இந்த நோக்கத்தினை இன்றும் பாடசாலை ரீதியாக மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் சாரணிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதனை குறிக்கும் வகையில் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த வழிப்புணர்வுபேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் கே.பாஸ்கர் தலைமையில் பேரணி ஆரம்பமாகியதோடு, மட்டக்களப்பு நகர் ஊடாக நீரூற்றுப்பூங்காவில்
உள்ள பேடன் பவல் சிலையருகே நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது பேடன் பவலின் சிலைக்கு கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி விருதுபெற்ற மாணவரும் வைத்திய நிபுணரும் பாடசாலையின் பழைய மாணவருமான டொக்டர் வ.விஜிதரன் கலந்து சிறப்பித்தார்.
மாணவர்களுக்கு சாரணியத்தின் முக்கியத்துவம் தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கிவைக்கப்பட்டன.