தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் ஊடக திலாப்பியாமீன் வளர்க்கும் பயனாளர்களுக்கு காசோலை வழங்கும் வைபவம் இன்று (24) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணத்திற்குரிய கரையோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு விரிவாக்கல் மற்றும் கண்காணிப்பு பிரிவானது மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி தொடர்பான நிலைபேறான சிறிய, நடுத்தர, பாரிய கரையோர நீர் உயிரின வளர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாக மாவட்டத்தில் காணப்படுகின்ற முக்கிய வளங்களில் ஒன்றான வாவிகளில் நீர் வாழ் உயிரின வளர்ப்பு சார்ந்த உணவு உற்பத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கமாகக் கொண்டு, கடற்றொழில் அமைச்சினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் திட்டத்தினுள் மட்டக்களப்பு மாவட்டத்தை வதிவிடமாக கொண்ட 29 பயனாளிகளுக்கு மிதக்கும் கூடுகளில் உவர் நீர் திலாப்பியா மீன்வளர்ப்பு மற்றும் விதை மீன் வளர்ப்பிற்கு ரூபாய் 250,000/= பெறுமதியான காசோலைகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இன்றை பொருளாதார நெருக்கடி நிலைமையிலும் அரசாங்கத்தின் இவ்வாறான திட்டங்கள் வழங்கப்படுவது பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கே ஆகும் எனவும் இத்திட்டத்தின் பயனாளிகள் இவ்வுதவியை கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தையும் மாவட்ட மீன் உற்பத்தியையும், மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டுமென இதன்போது இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கினைப்புக்குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், திருமதி.நவரூப ரஞ்ஜனி முகுந்தன் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மீன்பிடி திணைக்கள அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு
தலைவரின் தனிப்பட்ட
செயளாலர் த.தஜிவரன்,
பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.