புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை விரைவாக தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது-

 


பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை விரைவாக தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை வழங்கியுள்ளார். 

இதன் பின்னர் அது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக தயாரிக்கப்பட்ட புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவுள்ள விடயங்கள் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நிகழ்காலத்துக்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதால், உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகங்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சட்டமூலத்தை தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.