ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடிய ஒரே முன்னாள் அதிபர் நான் மாத்திரமே - முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன

 


பொது நிதியை தாம் வீணடிக்கவில்லை என வலியுறுத்திய முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, தான் அதிபராக இருந்த போது தனது மனைவியால் தயாரிக்கப்பட்ட மதிய உணவை வாழை இலையில் போர்த்தி கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

“அதிபராகவும் அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் மதிய உணவை தனது வீட்டிலிருந்து கொண்டு வந்து சாப்பிட்டதாகவும் தனக்கு உணவு தயார் செய்ய தனது மனைவி யாரையும் அனுமதிப்பதில்லை,'' எனவும் தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்ததாக தெரிவித்தார். ஆணைக்குழு அறிக்கையை இறுதி செய்யும் போது தான் ஆட்சியில் இருந்திருந்தால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தமக்கு எதிராக ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்காது என்று அவர் கூறினார்.  

முன்னாள் அதிபர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும், அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடிய ஒரே முன்னாள் அதிபர் தாம் மட்டுமே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"இதுதான் நான் அனைவராலும் குறிவைக்கப்படுவதற்குக் காரணம்," என்றும் அவர் கூறினார்.