சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் 15 ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்

 


 

சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் என்ற விவேகானந்தனூர் சதீஸ் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த 15 ஆண்டுகள் தமிழ் அரசியல் கைதியாக அவர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் .

அவருக்கு 2023  பெப்ரவரி - 01 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய சதீஸ்குமார் ஏற்கனவே உயர் நீதிமன்றில் செய்யப்பட்டிருந்த மேல் முறையீட்டு மனுவினை மீளப் பெற்றுக்கொள்வதற்கான தனது ஒப்புறுதியினை பெப்ரவரி-23 அன்று சட்டத்தரணிக்கூடாக மன்றுக்கு சமர்ப்பித்திருந்தார்.
 
இதனையடுத்தே மேல் முறையீட்டு மனுவினை மீளளித்த உயர்நீதிமன்றம் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தது.
 
இந்தநிலையில் தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் இன்றைய தினம் கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

விவேகானந்த நகர் கிழக்கு கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்ட சதீஸ்குமார் நெருக்கடிகள் மிகுந்த யுத்த காலங்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி ஓட்டுநராக உயிர் காப்புப் பணியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வந்திருந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பணியின் நிமித்தம் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வவுனியா- தேக்கவத்தை சோதனைச் சாவடியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சதீஸ்குமாருக்கு எதிராக விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவியதாக குற்றப்பத்திரம் தயாரித்து வவுனியா மேல் நீதிமன்றில் அவசரகாலச் சட்டவிதியின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

குறித்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 2011ஆம் ஆண்டு சதீஸ்குமாருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

அதனையடுத்து வழக்கின் தீர்ப்பை ஆட்சேபித்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் எதிராளி மேல் முறையீடு செய்திருந்தார்.

எனினும் வவுனியா மேல் நீதிமன்றின் தண்டனைத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மீளுறுதிப்படுத்தி வழக்கை முடிவுறுத்தியது.

இறுதியாகஇ 2017ஆம் ஆண்டு வழக்கின் தீர்மானத்தை மீளவும் உயர்நீதிமன்றில் மேல் முறையீடு செய்த சதீஸ்குமார் நீதி நிவாரணத்தைக் கோரி காத்திருந்தார்.

இந்த நிலையிலேயே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.