மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட இவ்வாண்டிற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை தற்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், நாட்டிலுள்ள பெண்கள் தொடர்ச்சியாக வலிமை மற்றும் மீளெழுச்சித்தன்மையை வெளிப்படுத்தி முன்னோக்கி பயணிப்பதன் மூலம், மரியாதையையும் பாராட்டையும் பெறுகின்றனர். அந்த வகையில், இவ்வருட மகளிர் தின கொண்டாட்டம் பெண்களின் குறிப்பிடும் படியான சாதனைகளை கௌரவிக்கும் பொருட்டு "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகின்றது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந் அவர்கள் கலந்து கொண்டதுடன், திருமதி ராதா ஞரனரெத்தினம் (ஒய்வு பெற்ற சிரேஸ்ட விரிவுரையாளர், ஆசிரியர் பயிற்சி கலாசாலை) மற்றும் திருமதி. காமினி யூட் இன்பராஜ் (மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் - பதில்) ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
கெளரவ அதிதிகளாக
திருமதி.ஜெயந்திமாலா பிரியதர்சன் (பிரதிக்கல்வி பணிப்பாளர் - திட்டமிடல், பட்டிருப்பு கல்வி வலயம்),
கலாநிதி திருமதி ஜெயப்பிரபா சுரேஸ் (தலைவர், பொருளியல் துறை - கிழக்கு பல்கலைக்கழகம்),
செல்வி. சுந்தரலிங்கம் நிலானி (சட்டத்தரணி),
திருமதி Dr சுகந்தினி பிரசாந் (சமூக மருத்துவ உத்தியோகத்தர், ஆயுர்வேத திணைக்களம்),
திருமதி வனிதா தனசேகரன் (ஆசிரிய ஆலோசகர்- நடனம், நிருத்திய கலாமன்ற அதிபர்),
திருமதி. ஜெயசாந்தி குணலோகிதாசன் (ஆன்மீக சொற்பொழிவாளர் - ஆசிரியர்),
திருமதி. சாவித்திரி செளந்தரராஜன் (விவசாய தொழில் முயற்சியாளர்) ஆகியோர் கலந்து கொண்டதுடன், அவர்களது துறை சார்ந்து கருத்தாடல் நிகழ்வு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
அத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களின் தாய்மார் இந்த நிகழ்வின் போது பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளிர் சங்கங்கள், சமுர்த்தி சங்கங்கள், கலைக் கழகங்கள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.