துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.

 


 

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டுக்கு மர்ம நபர்கள் சென்றனர். அப்போது திடீரென அந்த வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 

 இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் உள்பட 2 பேர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆனால் எதற்காக கொன்றனர் என்பது தெரியவில்லை. மேலும் இதற்கு முன்பு பர்மிங்காம் அருகே ராக்லாண்டில் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.