வி.ரி. சகாதேவராஜா
நள்ளிரவில் வயலுக்குள் இறங்கிய சுமார் 60 காட்டு யானைகள், 350 நெல்மூடைகளை துவம்சம் செய்துள்ளன.
இச்சம்பவம், காரைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் இடம்பெற்றது.
காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள வளைந்தவட்டை மேல்கண்டத்திலுள்ள விஷ்ணு கோயிலுக்கு சொந்தமான 09 ஏக்கர் காணி உள்ளிட்ட 13 ஏக்கரில் விளைந்த நெல் அறுவடை செய்யப்பட்டு, வாகனத்தில் ஏற்றுவதற்காக மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன், கமநல உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் மற்றும் அதிகாரிகளுக்கு முறையிடப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் காலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று அங்கு நடந்தவற்றை விசாரித்தார்.
அறுவடை நடைபெறும் வேளையில் வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.