மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் தீயினால் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகிய குடும்பத்திற்கான புதிய வீட்டினை நிர்மானிப்பதற்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் சுபவேளையில் இடம்பெற்றது.
கடந்த டிசம்பர் மாதம் 30 திகதி இரவு வேளையில் செல்வாநகர் பகுதியில் வசித்து வந்த ஏழை குடும்பத்தின் வீடு திடீர்ரென தீப்பற்றி எரிந்த நிலையில் வசிப்பதற்கு இடம் இல்லாது பரிதவித்து வந்த குடும்பத்திற்காக நீர்மானித்து கொடுக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் இடம்பெற்றது.
பிரித்தானியாவில் இயங்கிவரும் மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கத்தினால் நிர்மானித்துக்கொடுக்கப்படவுள்ள குறித்த வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதி ரீ.சுந்தரராஜா கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்த குறித்த நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் தங்கவேல், சமூக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான உ.உதயகாந்த் (JP), வீட்டின் உரிமையாளர், அவர்களது உறவினர்கள், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு வீட்டிற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.
நளிவுற்ற மக்களின் நலனிலினை கருத்திற்கொண்டு "கல்வியாலும் - ஆரோக்கியத்தாலும் எமது சமூகத்தை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும்
இலவச கல்வி திட்டம் மற்றும் சத்துமா வழங்கும் திட்டம் போன்ற பல்வேறுபட்ட சமூக நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கத்தினால் குறித்த வீடு மிக விரைவில் கட்டிமுடிக்கப்பட்டு பயனாளியின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதாக இங்கு கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கத்தின் (பிரித்தானியா) பிரதிநிதி ரீ.சுந்தரராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த குடும்பத்தின் நிலையினை அறிந்து அவர்களுக்கான நிரந்தர வீட்டினை கட்டிக்கொடுக்க முன்வந்த பிரித்தானியாவில் இயங்கிவரும் மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் உமாசந்திரன் உள்ளிட்ட சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதேச செயலாளர், குறித்த குடும்பத்தின் வீடு தீக்கிரையாகி வேளை தாமாகவே முன்வந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்கள், ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தமது நன்றியினையும் தெரிவித்திருந்தார்.