சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் சிறு தொழில் முயற்சி உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்!!!

 

 



மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா கலந்துகொண்டு உரையாற்றுகையில்,
"தற்போது பெண்கள் கல்வியில் முன்னேற்றமடைந்து வருவதுடன் சகல துறைகளிலும் பெண்கள் முன்னிலையில் உள்ளனர். எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. அதிலும் சமூக வலைத்தளங்களில் இவ்வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சமுர்த்தி சமுதாய அடிப்படை குழுக்களில் அங்கத்துவம் வகிக்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு தலா 10,000/= ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் காத்தான்குடி தள வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜாபிர், மாவட்ட சிறுதொழில் முயற்சி பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் ரீ.நிலோசன், உதவி பிரதேச செயலாளர் சில்மியா, கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம சேவை நிருவாக, அபிவிருத்தி, கிராம சேவை மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதேச சிறு தொழில் முயற்சி பிரிவின் ஏற்பாட்டில் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை இடம்பெற்றது.
இங்கு சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உத்தியோகத்தர்களால் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.