நான் எந்தவித ஊழலும் செய்யவில்லை,பழிவாங்கலாகவே என்மீதான பணிநீக்கம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

 

 


 

நான் எந்தவித ஊழலும் செய்யவில்லை.இராஜாங்க அமைச்சர் ஒருவரின் பழிவாங்கலாகவே என்மீதான பணிநீக்கம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் காணி ஆணையாளர் நே.விமல்ராஜ், மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். 

இதன்போது ​அவர்  மேலும் கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது; 

2012ஆம் ஆண்டு தொடக்கம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக கிழக்கு மாகாணம், வடமாகாணம் உட்பட பல இடங்களில் கடமையாற்றியுள்ளேன். இன்றுவரையில் நான், எந்தவித குற்றச்சாட்டுக்கும் உள்ளாகவில்லை. 

இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற அரசியல்வாதியொருவர், எனக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலையும் அழுத்தங்களையும் வழங்கிவந்தார். குறித்த அரசியல்வாதி, தனது ஆதரவாளர்களுக்கு காணிகளை வழங்குமாறு கடிதங்களை அனுப்பியிருந்தார். ஏக்கர் கணக்கிலும் பேர்ச்கணக்கிலும் காணிகளை வழங்குமாறு கோரியிருந்தார். சில நிறுவனங்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை வழங்குமாறு கோரியிருந்தார்.

இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் அவருக்கான கௌரவத்தை  வழங்கும் வகையில், அவரது அலுவலகத்துக்குச் சென்று,டு அரச சட்டதிட்டங்களுக்கு மாத்திரமே என்னால் செயற்படமுடியும் என்று எழுத்துமூலம் வழங்கியிருந்தேன். அன்றுமுதல் என்மீதான பழிவாங்கும் படலம் ஆரம்பமானது.
2021ஆம் ஆண்டு, “இங்கு கடமையாற்ற வேண்டாம் மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டுச்சென்றுவிடு; போகாவிட்டால் உனது நற்பெயருக்கு களம் ஏற்படுத்துவேன்” என்று எச்சரிக்கப்பட்டேன். 
புன்னக்குடா பகுதியில் காணி அளவைகள் இரண்டு தடைவ முன்னெடுக்கப்பட்டதாகவே என்மீதான குற்றம்சுமத்தப்பட்டது. 

இலங்கை முதலீட்டு அதிகாரசபையின் ஊடாக ஆடைத்தொழிற்சாலையை அமைப்பதற்கு இந்த அனுமதி கோரப்பட்டிருந்தது.

201ஆம் ஆண்டு இதற்காக முதற்ற​டவை அளவீடு செய்யப்பட்டது. அதனை கையளிக்கும் நேரத்தில், அப்பகுதியில் காணி அபகரிப்பில் செயற்பட்டுவந்த குழுவொன்று மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, நீதிமன்றம் செல்லவேண்டிய நிலையேற்பட்டது. அதன்போது, நீதிமன்றம் மீண்டும் அளந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தது. 

அக்காலப்பகுதியில், என்மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தேன். நான் விடுமுறையில் இருந்தேன். நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை யாரும் கேள்விக்கு உட்படுத்தமுடியாது. இது தொடர்பில் நான் மேன்முறையீடு செய்துள்ளேன். நீதிமன்ற அறிக்கைககளை சமர்பித்துள்ளேன். இதுதான் நடந்த உண்மை எனவும் தெரிவித்தார்.