அலவத்துகொட பல்லேகம, எல்லேகட பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்ட திருமணமான பெண்ணின் படுகொலை தொடர்பில் தேவையான டீ.என்.ஏ பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் நேற்று (28) அனுமதியளித்தது.
இந்த வழக்கு கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (28) விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அலவத்துகொட பொலிஸாரினால் மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கே நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடம் இருந்து இரத்தமாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த ரோமங்கள் மற்றும் விந்து அனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றை வைத்தே டீ.என்.ஏ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
மார்ச் 10 ஆம் திகதி இரவு வீட்டில் தனியாக இருந்த திருமணமான பெண் படுகொலைச் செய்யப்பட்டு, அவரது வீட்டுக்கு அருகிலுள்ள வயலில், சேற்றுக்குள் அமிழ்த்தப்பட்டிருந்தார். அவரது சடலம் மறுநாள் (11) கண்டறியப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அலவத்துக்கொட பொலிஸார், அதே பகுதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.