ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன .

 


ஆசிரியர்களின் இடமாற்றங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை. இடமாற்றங்கள் தீர்மானித்தபடியே வழங்கப்படுகின்றன. நேற்றும் இன்றும் ஒரு தொகை ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன  என கல்வியமைச்சர்   சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.   

  க.பொ.த. சாதாரண தர பரீட்சையுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்த ஆசிரியர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இடமாற்றத்தை பின்னர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை  முன்வைத்து ஆசிரியர்  இடமாற்ற சபை களைப்பு, ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த கல்வி அமைச்சர் மேலும் கூறுகையில்,

 10 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதை அடிப்படையாக வைத்தே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில் இருந்தே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் கடந்த மூன்று வருடங்களில் கொரோனா சூழ்நிலை காரணமாக இது இடம்பெறாததால் அனைத்தையும் ஒன்றாக தற்போது எடுத்துள்ளோம். அந்த வகையில் மொத்தமாக 8,893 இடமாற்றங்களுக்கான  அனுமதி இடமாற்ற சபை மூலம் கிடைத்துள்ளது.

இதில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் 681 பேர் அடங்குகின்றனர். அந்த வகையில் 388 இடமாற்ற கடிதங்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.. மீதமானவை உடனடியாகவே  தபாலில் அனுப்பப்படும். சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் பத்து வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் சேவையாற்றி கட்டாய இட மாற்றத்திற்காக இருப்பவர்கள் என்றார்.