ஊழல் ஒழிப்பும் நிர்வாக சீர்திருத்தமும் இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

 


கடனுதவி திட்டத்தின் இரண்டு முக்கிய தூண்களாக ஊழல் ஒழிப்பும் நிர்வாக சீர்திருத்தமும் இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நிதியத்தில் இலங்கை விடயங்களைக் கையாளும் அதிகாரிகள்,  ஒன்லைன் ஊடாக வாஷிங்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை (21) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் இணங்க இலங்கை அரசாங்கம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அதில் சொத்துப் பிரகடனம் மற்றும் சொத்து மீட்பு ஆகிய இரண்டும் உள்ளடங்குவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் மசாஹிரோ நொசாகி தெரிவித்தார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் சொத்து குறைப்பு பகுதி விரைவில் கவனிக்கப்படும் என்றும் சொத்து மீட்பு பகுதி மார்ச் 2024 க்குள் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் சமூக பாதுகாப்பு வலை திட்டங்களின் செயல்திறன், இலக்கு ஆகியவற்றை மேம்படுத்த அதிகாரிகள் தொலைநோக்கு நிறுவன சீர்திருத்தங்களையும் மேற்கொள்கின்றனர் என்றார்.

அத்துடன் முதியோர்களுக்கு (70 வயதுக்கு மேற்பட்டவர்கள்), ஊனமுற்றோருக்கான உதவித்தொகை, சிறுநீரக நோயாளிகளுக்கு நிதியுதவி என்பனவற்றை வழங்கும் சமூக பாதுகாப்பு வலைத் திட்டங்கள் சமுர்த்தி திட்டத்தை உள்ளடக்கியது (இலங்கையில் வறுமையை இலக்காகக் கொண்ட மிகப்பெரிய பணப் பரிமாற்றத் திட்டம்) என்றும் குறிப்பிட்டார்.