மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறு தேன்கல் பிரதான வீதியில், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
திகிலிவெட்டை பகுதியில் வசிக்கும் 42 வயதுடைய கணபதிப்பிள்ளை சபேந்திரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே காட்டு யானை தாக்குதலில்
உயிரிழந்தவராவர்.
உயிரிழந்த நபர் வழமையாக திகிலிவெட்டையிலிருந்து தரவை பகுதிக்கு
தன்னுடைய கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்று காலை மற்றும் மாலை வேளையில்
தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புபவராவர்.
வழமை போன்று திகிலிவெட்டையில் உள்ள தனது வீட்டில்
இருந்து சிறுதேன்கல் பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் தரவைப்
பகுதிக்கு சென்று கொண்டிருந்தவேளை, வயல் வேலைக்காக வீதியால் நடந்து சென்ற
குமார் சதீஸ்வரன் என்ற 22 வயதுடைய இளைஞரையும் மோட்டார் சைக்கிளில்
ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளார்.
சிறுதேன்கல் காட்டு வழிப்பாதை ஊடாகச் சென்று கொண்டிருந்த வேளையில்
எதிரே துரத்திக் கொண்டு வந்த காட்டு யானையைக் கண்டு இருவரும் ஓட முற்பட்ட
வேளை,
யானை இருவரையும் தாக்கியுள்ளது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில், மற்றைய நபர் மயிரிழையில் உயிர்த்தப்பியுள்ளார்.