மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த மீனகயா தொடரூந்தின் மலசலகூடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தையின் தாயும், தந்தையும் திருமணம் செய்துள்ளமை கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று தெரியவந்துள்ளது.
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தமது கைத்தொலைபேசியை ஒப்படைக்குமாறு குழந்தையின் தந்தை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது.
இதன்போது, குறித்த குழந்தை தொடர்பில் கோட்டை நீதிவான் வினவியதுடன், கடந்த 18ஆம் திகதி தாம் திருமணம் செய்து கொண்டதாகவும், குழந்தையும் மனைவியும் கொஸ்ஸின்ன பகுதியிலுள்ள வீடொன்றில் இருப்பதாகவும் குழந்தையின் தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் தமது திருமண சான்றிதழையும் நீதிவானிடம் சமர்ப்பித்ததாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.