மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில், வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
இன்று நண்பகல் வேளை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில், பாடசாலை வீதி விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய கோ.முருகன் என்ற குடும்பஸ்த்தரே உயிரிழந்தவராவர்.
உறவினர் ஒருவரின் மரண வீட்டில் கலந்து கொண்டவர்களுக்காக மதிய உணவினை சாப்பாட்டுக் கடையில் கொள்வனவு செய்யும் முகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவேளை பின்னால் வந்த பட்டா ரக வாகனம் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர் மீட்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.