யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட தொடங்கியதன் பின்னர், தற்போது பல விமான நிலையங்கள் தமது சேவையினை யாழ்ப்பாணத்துடன் விஸ்தரிப்பதில் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்துடன் சேவைகளை மேற்கொள்ள புதிய இந்திய விமான நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராக்கேஷ் நட்டாஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடைபெறும் கண்காட்சியின் இறுதி நாளான இன்று அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துக்கும் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கு இடையே வாராந்தம் நான்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர், முழு அளவிலான பயணிகள் பயணம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
பெங்களூர் போன்ற ஏனைய இடங்களுடனான சேவையினை விஸ்தரிப்பதில் தாம் ஈடுபாட்டை கொண்டுள்ளதாகவும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராக்கேஷ் நட்டாஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வர்த்தக சரக்கு சேவைகளையும் ஆரம்பிக்க இந்திய வர்த்தக சமூகம் எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டால், வட மாகாண மக்கள் தமது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.