ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கோப்பைகள், கரண்டிகள், பீங்கான்கள், மாலைகள், முட்கரண்டிகள், இடியப்பத் தட்டுகள் போன்றவை தடை செய்யப்படவுள்ளன.

 

பிளாஸ்டிக் பயன்பாடு சர்வதேசத்திலும் இலங்கையிலும் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றாடல் அமைச்சு ஐந்து ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில
பிளாஸ்டிக் உற்பத்திகளையும் தடை செய்யவிருப்பதாக சுற்றாடல் அமைச்சு செயலாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, சுற்றாடலுக்குப் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதக விளைவுகளைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றாடலில் கடுமையான தாக்கத்தை உருவாக்குகின்றன.

எனவே எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கோப்பைகள், கரண்டிகள், பீங்கான்கள், மாலைகள், முட்கரண்டிகள், இடியப்பத் தட்டுகள் போன்றவை தடை செய்யப்படவுள்ளன.

அத்துடன் நாட்டில்  தேவைக்கதிகமான கையிருப்பு உள்ளதால் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பிளாஸ்டிக் உருண்டைகளின் (Plastic Pellets) இறக்குமதியையும் கட்டுப்படுத்தவுள்ளதாகவும் இதன்மூலம் டொலரை சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்

மேற்குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு  தொழில் ஆரம்பிக்க இருப்போருக்கு இது உந்து சக்தியாக இருக்கும். மக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பீங்கான், கரண்டிகள் போன்றவற்றை வீடுகளில் உபயோகிப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் வெளிப்புறங்களில் உதாரணமாக சுற்றுப் பயணங்கள்  மேற்கொள்ளும் போது குறித்த வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதோடு அவற்றை சூழலில் வீசுவது போன்ற செயற்பாடுபளை செய்வதன் மூலம் சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றனர்.

சந்தைக் கேள்விக்கேற்ப பிற பிளாஸ்டிக் பொருட்களையும் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பிளாஸ்டிக் அற்ற மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற சுற்றாடலை உருவாக்க முயற்சிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.