உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இலங்கை வந்தடைந்துள்ளது.

 


உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் இன்று (5) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளது.

413 பயணிகளையும் 29 பணியாளர்களையும் தாங்கிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஈ.கே. 449 என்ற ஏ380 - 800 வகை எயார்பஸ் விமானம் இன்று அதிகாலை 3.10 அளளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விமானம் இதற்கு முன்னர் இரண்டு முறை நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் ஒக்லேண்டிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்கும் குறித்த விமானம்,  தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கட்டுநாயக்கவுக்கு வந்துள்ளது.

இதன்படி, குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலைய பெற்றோலிய முனையத்தில் இருந்து ஒரு கோடியே அறுபத்து எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான, 62,800 லீற்றர் ஜெட் எரிபொருள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

டுபாய் விமான நிலையத்தைச் சுற்றி பனிமூட்டமும், மோசமான வானிலையும் நிலவுவதால், விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் தரையிறங்க முடியாவிட்டால், விமானம் பல சுற்றுகளைச் சுற்றி வர எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.