தீவுப் பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை அதிகரித்து வருகின்றது.

 


மன்னார் தீவுப் பகுதியில் 2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் தீவுப் பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் காற்றாலை மின்சாரம் தொடர்பில் அரசாங்கத்தால் சூழலியல் தாக்கல் அறிக்கை (EIA) வெளியிடப்பட்டுள்ளது.
 
அவ்வறிக்கை தொடர்பில் பொது அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறித்த அறிக்கையில் மக்களின் பாதிப்பு தொடர்பிலான உண்மைத் தன்மை இல்லை என்பதே மக்கள் பிரதிநிதிகளின் கருத்தாக அமைந்துள்ளது.

2ஆம் கட்ட காற்றாலை மின்சாரம் மன்னார்  தீவுப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு பல்வேறு தாக்கத்தை செலுத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு, தீவுப் பகுதிக்குள் நிறுவுவதை முற்றாக நிறுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் ஆராயும் நோக்கோடு, 'சூழலியல் நீதிக்கான மையம்' பிரதிநிதிகள் அடங்கிய குழு, கொழும்பிலிருந்து மன்னாருக்கு நேற்று (20) காலை சுமார் 9 மணிளவில் வருகை தந்து, OPEnE நிறுவனம் ஒன்றின் மாநாட்டு மண்டபத்தில், மன்னார் மாவட்ட மற்றும் மன்னர் தீவுப் பகுதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கலந்துரையாடலில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட  அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு, மக்களின் விருப்பு - வெறுப்புகளை ஆராய்ந்து கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஆலோசனைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.