மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளீர் தின கௌரவிப்பு நிகழ்வு!!




மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  "அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்  தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (17) திகதி இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் செயலக வளாகத்தில் "அவளுக்காக ஒரு நிமிடம்" எனும் தலைப்பில் கதிரவன் கலைக்கழகத்தின் - கதிரவன் வீதி நாடக குழுவினரினால் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச  ரீதியில் திறமையை வெளிப்படுத்தியிருந்த மாவட்டத்தைச் சார்ந்த பெண்களுக்கும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சித்திர போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருணாளினி சந்திரசேகரம், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் திருமதி கலாராணி  மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதன்போது நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து நிகழ்வை சிறப்பித்த மட்டக்களப்பு மாவாட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் தனது பிரதம அதிதி உரையின்போது "நாடு பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீண்டெழுவதற்கு பெண்களின் பங்களிப்பு மிக மிக அவசியமானது" என இதன்போது  வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.