பொருளாதாரத்தை பலப்படுத்தாமல் ரூபாயை பலப்படுத்த முடியாது.

 

 


 

கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதி பலமாக காணப்பட்டதாகவும் தற்போது அதன் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா, பொருளாதாரத்தை பலப்படுத்தாமல் ரூபாயை பலப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இம்மாதத்தின் பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தும் திறன் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

2025 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதிக்கு அந்த பதவியில் இருக்க முடியும் என்பதால், தேவைப்பட்டால் புதிய பாராளுமன்றத்தில் இருந்து சர்வகட்சி அரசாங்கத்தை அழைக்க முடியும்  என்றும் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வேலைநிறுத்தங்கள் தொடருமானால் அது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்றும் வருமானத்தை அதிகரிப்பதுடன் மக்களின் பிரச்சினைகளிலும் அரசாங்கம் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.