மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் உள்ள வலயக்கல்வி அலுவலகங்களின் வலயக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் பிரத்தியேக செயலாளர் த.தஜிவரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பாக தமது கருத்துக்களையும், பிரச்சனைகளையும் முன்வைத்துள்ளனர்.
இதன்போது மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாதகமாக காணப்படும் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், கல்வித்துறை சார் திணைக்கள அதிகாரிகளிடம் விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் கல்வி அமைச்சின் ஊடாக இந்த பிரச்சனைக்கான தீர்வினை மிக விரைவாக பெற்றுத்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.