நாணய நிதியத்தின் உதவிகள் வாசல் கதவை திறந்து விட்டது எஞ்சியதை சாதிக்கவாவது ஒன்றுபடுங்கள்- அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

 

 


 சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதையிட்டு அவர் வௌியிட்டுள்ள செய்தியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,

நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் விமர்சனங்கக்கு மத்தியிலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவியுள்ளது. இவ்வுதவியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி,உலக வங்கி என்பனவும் உதவ உள்ளன.அரசியல் நோக்கில், நாட்டின் நிலைமைகளை தலைகீழாகக் காட்டுவதற்கு சிலர் முயற்சிகளை முன்னெடுத்த போதிலும்,ஜனாதியின் தலைமையில் சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது.இதனால்தான், இந்நிதியுதவிகள் எமக்கு கிடைத்துள்ளன. இனியாவது எதிர்க்கட்சிகள் அதிகார ஆசைகளை மறந்து மக்களின்,பசி,பட்டினி மற்றும் பொருளாதார நெருக்கடிகளைப் போக்குவதற்கு முன்வர வேண்டும். இதற்காக ஜனாதிபதி எடுக்கும் சகல நடவடிக்கைகளையும் இவர்கள் ஆதரிப்பது அவசியம்.தேர்தலை இலக்கு வைத்தோ, ஆசனங்களைக் குறிவைத்தோ செயற்படும் சூழல் இதுவல்ல.இதைக் கருதித்தான், அன்று விடுக்கப்பட்ட அழைப்பையேற்று ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க ஆட்சியைப் பாரமேற்றார். அவரின் துணிச்சல்  வீண்போகவில்லை.இப்போது அடைந்திருப்பது சாதனையின் முதற்கட்டமே. இன்னும் பல கட்டங்களைக் கடந்து சாதிக்க வேண்டியுள்ளது. இவற்றை விரைவாகச் சாதிப்பதற்கே சகலரதும் ஒத்துழைப்பைக் கோருகிறோம். தனியே நின்று சாதிப்பதானால்,பல வருடங்கள் தேவைப்படலாம்.நாடு இன்றுள்ள நிலையில்,இனியும் இதற்கான முயற்சிகள் காலவிரயங்களாகக் கூடாது.

ஏனெனில்,எஞ்சியுள்ள இந்தச் சாதனைகளே,   நடுத்தர மற்றும் அடிமட்ட பொருளாதாரத்திலுள்ள குடும்பங்களை முன்னேற்றும். எனவே,எஞ்சியுள்ளவற்றை சாதிக்கவாவது,எதிரணிகள் ஒத்துழைப்பது அவசியம். சொந்த இலக்குகளை அடைந்து கொள்ளும் ஆசைகளை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டுப்பற்று மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபடுவதுதான், மக்கள் பிரதிநிதிகளுக்குள்ள பொறுப்பு. இப்பொறுப்புக்களில் ஒன்றிணைய வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.