முத்திரையிட்டு மூடப்பட்ட முட்டைகளஞ்சியம் திறக்கப்பட்டது .

 


நுகர்வோர் அதிகார சபையால் முத்திரையிட்டு மூடப்பட்ட ஜா-எல தடுகம பகுதியில் உள்ள முட்டைக் களஞ்சியத்தை, மீளத் திறந்து உரிமையாளரிடம் அதனை ஒப்படைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முட்டைகளை பதுக்கி வைத்து, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்து, நுகர்வோர் அதிகார சபை, குறித்த களஞ்சியத்தை முத்திரையிட்டு மூடியது.

சம்பவம் தொடர்பில், ஜா-எல காவல்துறையும், நுகர்வோர் அதிகார சபையும், நீதிமன்றத்திற்கு இன்று அறிக்கையிட்டன.

குறித்த களஞ்சிய உரிமையாளர், நிறுவனங்களுக்கு முட்டையை விற்பனை செய்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த களஞ்சியத்தை மீளத் திறந்து, உரிமையாளரிடம் அதனைக் கையளிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, இன்று மாலை ஜா-எல காவல்துறையும், நுகர்வோர் அதிகார சபையும், அந்தக் களஞ்சியத்தை மீளத் திறந்துள்ளன.

முட்டைகள் அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அண்டன் நிஷாந்தவுக்கு சொந்தமானதாகும்.

சுற்றிவளைப்பு இடம்பெற்றபோது, அங்கு 60,000 முட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.