மட்டக்களப்பில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்துவரும் லிப்ட் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால், மாவட்டச் செயலக ஊடகப் பிரிவின் சேவையை பலப்படுத்தும் வகையில் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான புகைப்படக் கருவி உட்பட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
லிப்ட்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் மற்றும் எல்விடாஸ் நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ரமேஷ் ஆகியோரினால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் புகைப்படக் கருவி உள்ளிட்ட உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டது.
எல்விடாஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கும், இளைஞர்கள் மத்தியில் ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதற்குமான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாக மாவட்டச் செயலக ஊடகப்பிரிவின் பாவனைக்கென இப் புகைப்படக்கருவியும், உபகரணங்களும் வழங்கப்பட்டன. மாவட்ட ஊடகப்பிரிவு உத்தியோகத்தர்கள், லிப்ட் நிறுவன உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.