மட்டக்களப்பில் இயங்கிவரும் LIFT எனும் மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு, மனிதநேயத் தகவல் குறிப்புகள் (மதகு) நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் நடாத்தப்படுகின்றன.
HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் LIFT நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் "ஊடக தர்மத்தை வலுப்படுத்தலும், வன்முறைத் தீவிரவாதத்தை தடுத்தலும்" எனும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இது நடாத்தப்படுகிறது.
மாணவர்கள் மத்தியில் சமூக ஊடகப் பாவனை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடாக கருத்து வெளியிடும் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும் இக் காலகட்டத்தில் அவர்களுக்கு ஊடக தர்மம், ஊடகம் தொடர்பான சட்டங்கள், வரையறைகள் போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை சரியான பாதையில் ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
அதனடிப்படையில் நேற்று 01.03.2023 திகதி மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலை, புனித சிசிலியா தேசிய மகளிர் பாடசாலை, இந்துக் கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி, காத்தான்குடி அல் ஹிரா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் சமகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் தலா 30 மாணவர்கள் வீதம் 150 மாணவர்கள் பயனடையவுள்ளனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த சமூக மேம்பாட்டில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு LIFT நிறுவனத்தினால் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு
இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கிற்கு வளவாளர்களாக பயன்படுத்தப்படுவது விசேட அம்சமாகும்.
அனைத்து பாடசாலைகளிலும் இரண்டு நாட் கருத்தரங்கு இடம்பெறவுள்ளதுடன், இவ்வாறான 30 கருத்தரங்குகள் ஏனைய பாடசாலைகளிலும் நடாத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.