நாடளாவிய ரீதியில் இடம்பெறும் வர்த்தக நிலையங்களை சுற்றி வளைக்கும் செயற்பாடு மட்டக்களப்பு மாவட்டத்திலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் வியாபார நிலையங்களை சுற்றி வளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து (12) திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வியாபார நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டன.
அவற்றில் 52 வியாபார நிலையங்களுக்கு எதிராக பாவனையாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதிலும் முட்டையை அதிக விலையில் விற்றமை மற்றும் விலையைக் காட்சிப்படுத்தாத 17 வியாபார நிலையங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஏனைய 35 வியாபார நிலையங்கள், காலாவதியான பொருட்கள் விற்பனை, மனித நுகர்வுக்குப் பொருந்தாத பொருட்களை வைத்திருந்தமை, விலை காட்சிப்படுத்தாது பொருட்களை விற்றல், பொறிக்கப்பட்ட விலைகளைத் திருத்தம் செய்து அல்லது அழித்து விற்பனை செய்தல், SLS தரச்சான்றிதழ் அற்ற பொருட்கள் விற்பனை மற்றும் பொருட்களை பதுக்கி வைத்திருந்தமை போன்ற தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை போன்ற பிரதேசங்களின் நீதவான் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இச்சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், அரசாங்கம் நிர்ணயித்த முட்டைக்கான கட்டுப்பாட்டு விலைகளான வெள்ளை 44 ரூபா, பழுப்பு நிற முட்டை 46 ரூபா ஆகியவற்றை கருத்திற்கொள்ளாது செயற்படும் வியாபார நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றிற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவிருப்பதாக தெரிவித்த பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம்.சப்றாஸ்,
பாவனையாளர்களும் தமது பொருட்களை வாங்கும் போது தவறுகள் அல்லது முறைப்பாடுகள் காணப்பட்டால் மாவட்ட செயலகத்தில் உள்ள தமது பிரிவிற்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.