மட்டக்களப்பு புகையிரத கடவை காப்பார்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .

 


 

மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்குள் புகையிரத கடவை காப்பாளர்கள் முன்னெடுத்தெடுத்த போராட்டம் பொலிஸார் நடாத்திய பேச்சு வார்த்தையினையடுத்து நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

சம்பள அதிகரிப்பு, நிரந்தர நியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட-கிழக்கு மாகாண புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்குள் புகையிரதங்களுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் புகையிரத கடவை காப்பாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் புகையிரத கடவை காப்பாளர்கள் ஈடுபட்டனர்.

நாட்டில் பொருளாதார சுமைகள் காரணமாக மக்கள் தினமும் கஸ்டங்களை எதிநோக்கிவரும் நிலையில் கடந்த பத்து வருடங்களாக மாதாந்தம் 7 ஆயிரத்து 500ரூபா சம்பளத்திற்கே தாங்கள் கடமையாற்றிவருவதாக கடவை காப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2013ஆம் ஆண்டு தாங்கள் பொலிஸ் திணைக்களம் ஊடாக புகையிரத கடவை காப்பாளர்கள் நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட்டதாகவும் மூன்று மாதங்களுக்கு நாள் சம்பளமாக 250ரூபாவும் மூன்று மாதங்களுக்கு பின்னர் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்பதுடன் ஆறு மாதங்களில் நிரந்தர நியமனங்களுக்குள் உள்வாங்கப்படுவீர்கள் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டடே நியமனம் வழங்கப் பட்டதென்றும், ஆனால் இதுவரை அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை நாடெங்கிலும் முன்னெடுக்கவுள்ளதாகவும் புகையிரத கடவை காப்பாளர்கள்
தெரிவித்தனர்.