(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு லேடி மனிங் ட்றைவிலுள்ள இல - 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் சி.ஜெய்சங்கர், ஓவியர் சு.நிர்மலவாசன், எழுத்தாளர் விஜயலெட்சுமி சேகர், விரிவுரையாளர் து.கௌரீஸ்வரன், கலாநிதி அ.விமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நேற்று ஆரம்பமான இக்கண்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை (10) வரை காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சிக் கூடத்தை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கமலா வாசுகி 1966 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கேயே கல்வி கற்றவர். யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், 1989.02.02 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழகத்தில் தனது முதலாவது ஓவியக் கண்காட்சியை நடத்தியதிலிருந்து இலங்கைத் தமிழ்ச் சூழலில் குறிப்பிடத்தக்க பெண்ணிலைவாத ஓவியக் கலைஞராகத் தன்னை வெளிக்காட்டியவராவார்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தனியாகவும் மற்றும் பல ஓவியர்களுடன் இணைந்தும் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ள இவர். 1995 இலிருந்து இற்றை வரைக்கும் மட்டுநகரைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றார். 1998 இல் மட்டுநகர் சாள்ஸ் மண்டபத்தில் தன்னுடைய ஓவியக் காட்சியை நடத்தியிருந்தார்.
பெண்ணிலைவாதச் சிந்தனைகளையும் அதற்குரிய வாழ்க்கை முறைகளையும் சமூகத்தின் பல்வேறு மட்டத்தினருடனும் பகிர்ந்தும், பரவலாக்கியும் கொள்வதற்கான ஊடகமாக கலை இலக்கியங்களைக் கையாண்டு வருகிறார்.
கடந்த மூன்று தசாப்தங்களாகத் தான் அனுபவித்த, எதிர்கொண்ட விடயங்களைப் பேசு பொருளாகக் கொண்டு தனது ஓவியங்களின் கண்காட்சியை நடத்துகிறார்.
இலங்கைத் தீவின் வரலாற்றில் 1989 தொடக்கம் 2023 வரையான காலகட்டம் என்பது கவனத்திற்குரிய சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் ஏற்பட்ட தீர்க்கமான காலமாக அமைந்துள்ளது.
இக்காலகட்டத்தில் ஒரு பெண்ணிலைவாதக் கலைச்செயற்பாட்டாளராகத் தீவிரமாக இயங்கிய கமலா வாசுகி, தனது படைப்புக்களுடாக இக்காலத்தின் வலிகளையும், ஆற்றுப்படுத்தல்களையும், நம்பிக்கைகளையும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விளைகின்றார்.
கடந்த மூன்று தசாப்த காலத்து வரலாற்றில் ஆணாதிக்கச் சிந்தனைகளின் ஆதிக்கமும் அவற்றின் நடைமுறைப்படுத்தல்களும் எமது பண்பாடுகளை எவ்வாறு தீர்மானித்து வந்துள்ளன என்பது குறித்தும் இதுபற்றிய பெண்ணிலைவாதப் பார்வைகள், பெண்ணிலைவாதிகளின் எதிர்வினைகள் எவ்வாறு உள்ளன என்பதையும் விளங்கிக் கொள்ளவும், கற்றறிந்து கொள்வதற்கும் கமலா வாசுகியின் ஓவியங்கள் பெரிதும் துணைபுரிவதாக இருக்கின்றன.
ஆணாதிக்கச் சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள பண்பாட்டு வெளிகளில் நிராகரிக்க முடியாத கேள்விகளுடன் பெண்ணிலைவாதச் சிந்தனைகள் உலகந்தழுவி முக்கியத்துவம் பெற்று வருகின்ற இக்காலகட்டத்தில், கமலா வாசுகியின் ஓவியங்களும் நிராகரிக்க முடியாத கலைப்படைப்புக்களாக முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
மேலும் இலங்கைத் தமிழ்ச் சூழலில் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஓவியங்களைப் படைப்பதற்கான ஊடகங்கள் கிடைக்காத போது எவ்வாறு ஓவியர்கள் செயற்பட்டார்கள் என்பதையும் எவ்வாறு தாக்கவன்மை கொண்ட ஓவியங்களைப் படைப்பாக்கஞ் செய்துள்ளார்கள் என்பதையும் விளங்கிக் கொள்வதற்கான வரலாற்று ஆதாரங்களைக் கமலா வாசுகியின் ஆக்கங்கள் காட்டி நிற்கின்றன.
இவ்வாறு பலதளங்களில் கவனிப்புக்குரிய காட்சி வெளியாகக் கமலா வாசுகியின் 'கடந்து வந்த காலத்தைப் பார்த்தல்' எனும் தொனிப் பொருளில் இவ் ஓவியக் காட்சி_நடைபெறுகிறது.