"ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" எனும் தொனிப் பொருளில் இரண்டு நாட்களைக் கொண்டமைந்த செயலமர்வு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
வெளிப்பாட்டு உரிமையும், நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் எனும் தலைப்பில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.
HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால் "ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" எனும் தொனிப் பொருளில் 900 இளைஞர், யுவதிகளை நேரடியாக நெறிப்படுத்தும் வண்ணம் இச்செயலமர்வானது நடாத்தப்பட்டு வருகின்றது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே, கருத்துச் சுதந்திரம் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு இடையே உள்ள மெல்லிய தடை கண்ணுக்குத் தெரியாத நிலையில் ஊடக சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் குறித்த செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இரு நாட்களாக இடம்பெற்ற மேற்படி செயலமர்வின் வளவாளர்களாக ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமான உ.உதயகாந்த், உருத்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் தொடர்பான தெளிவுறுத்தல்களை வழங்கி இருந்தனர்.
நிறைவில் செயலமர்வின் இறுதி நாளன்று கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் LIFT நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தின் இந்த நிகழ்விற்கு பூரண அனுசரணையினை மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு மற்றும் மனிதநேய தகவல் குறிப்புகள் (மதகு) நிறுவனம் ஆகியன வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதே வேளை குறித்த இரு தினங்களிலும் மட்டக்களப்பு சிவானந்தா உயர்தர பாடசாலையிலும், செட்டிபாளையம் மகா வித்தியாலயம் மற்றும் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் ஆகியவற்றில் இப் பயிற்சிச் செயலமர்வுகள் இடம்பெற்றதுடன் வளவாளர்களாக ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டதுடன், Lift நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.