மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் விவசாயிகளுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்!!




மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராசா மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சினால் இலங்கை பூராகவும் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக TSP உரம் வழங்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கமநல கேந்திர நிலையங்கள் ஊடாக அடிக்கட்டுப்பசளை (TSP) கடந்த மாதம் 20.03.2023 திகதி முதல் பெரும் போகத்திற்காக வழங்கப்பட்டு வருகின்றது.

அரசினால் வழங்கப்படும் குறித்த உரத்தினை இதுவரை மட்டக்களப்பு மாவட்ட  விவசாயிகள் 40% வரையே பெற்றுள்ளதாகவும் எதிர்வரும் 10 திகதியுடன் உர விநியோகம் நிறுத்தப்படவுள்ளதனால், அதற்கு முன்னர் தங்களுக்கான இலவச உரத்தினை பெற்றுக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட விவசாயிகளிடம் மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு சீனா அரசாங்கத்தின் உதவியுடன் அரசாங்கத்தினால் விவசாயிகளின் பெரும் போக நடவடிக்கைகளுக்காக இலவசமாக வழங்கப்பட்டுவரும் டீசலுக்கான காலம் முடிவடைந்த நிலையில் விவசாயிகளின் நன்மை கருதி எதிர்வரும் 14.04.2023 வரை  நீடிக்கப்பட்டுள்ளதெனவும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 196,000  லீற்றரில் 50% ஆன விவசாயிகள் மாத்திரமே குறித்த இலவச டீசலினை பெற்றுள்ளார்கள் எனவும் அதனையும் குறித்த கால எல்லைக்குள் விவசாயிகள் பெற்றுக்கொண்டு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், மாவட்டத்தின் உணவு உற்பத்திக்கு பங்காற்றுவதுடன், அரசினால் முன்னெடுக்கப்படும் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் அரசினால் வழங்கப்படும் மானிய உரம் மற்றும் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படாதவண்ணம் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.