உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன .

 


நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படமாட்டாது என அறியமுடிவதுடன், எதிர்வரும் தினங்களில் அச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பாரிய எதிர்ப்பலை தோற்றம்பெற்றுள்ள நிலையில், அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை இம்மாத இறுதி வாரம் வரை தாமதிக்கப்போவதாகக் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

அதன்படி அச்சட்டமூலமானது 25 ஆம் திகதி  அல்லது 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அச்சட்டமூல சமர்ப்பணம் தொடர்பில் நேற்று  (24) திங்கட்கிழமை மாலை 4 மணிவரை ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ உறுதிப்படுத்தினார்.