விழுப்புரம் அருகே பில்லூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலிவு (86). இவரது மனைவி மணி (65). கலிவு சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இவர்களுக்கு முருகன் உட்பட மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
கலிவு, மணி இருவரும் பில்லூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது அவர்களின் பேரன் அருள்சக்தி (முருகன் மகன்) மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பொலிசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் பதுங்கியிருந்த அருள்சக்தியை (19) நேற்றிரவு பொலிசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது தாத்தா, பாட்டியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.