களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை தாம் கையகப்படுத்தி உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 


 

163 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை தாம் கையகப்படுத்தி உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமான சொஜிட்ஸ் களனிதிஸ்ஸவினால் இயக்கப்பட்டு வந்த 163 மெகாவோட் சுழற்சி மின் நிலையம் மார்ச் 28 ஆம் திகதி கையகப்படுத்தப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சொந்த மின் நிலையத் திறனை 163 மெகாவோட்டால் அதிகரிக்கச் செய்துள்ளதாக  சபை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பொருளாதார தடைகள் காரணமாக சவால்கள் மற்றும் சட்ட அம்சங்கள் உட்பட பல சிக்கல்கள் மின்சார சபையின் பேச்சுவார்த்தைகள் மிகவும் கடினமாக இருந்த போதும் சபை அதை சமாளித்து ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தை  வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளது.

2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசாங்கக் கொள்கை கட்டமைப்பின் கீழ், சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்துடன், ஒரு சுயாதீன மின் உற்பத்தியாளராக கையொப்பமிட்டதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ஒப்பந்தம் 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்ற நிலையில், மின் கொள்வனவு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி 2022 ஆம் ஆண்டு மின்நிலையத்தை கையகப்படுத்துவதற்கான செயல்முறை மின்சார சபையினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.