உள்ளுர் பாலுற்பத்திகளின் விலைகளைக் குறைக்க மாட்டோம்.

 


ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாய் வலுவடைந்து வருவதால் உள்ளுர் பாலுற்பத்திகளின் விலைகளைக் குறைக்க மாட்டோம் என உள்நாட்டு பாலுற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பால்மா இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளனர்.

அதற்கேற்ப ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை ரூ. 200 இனாலும் 400 கிராம் பால்மாவின் விலை ரூ.80 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் வருமானத்தில் 90 சதவிகிதத்தை  பால் உற்பத்தியாளர்களுக்கு புதிய பால் வழங்குவதற்காக விநியோகிக்கப்படுவதாகவும், மீதமுள்ள இலாபத் தொகை நிறுவனத்தின் வாகனங்களுக்கான எரிபொருளுக்காக செலவிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் அந்த விலை குறைப்புக்கும் பாலுற்பத்திக்கும் நேரடித் தொடர்பு இல்லை.

நாங்கள் பால் பொருட்களை உற்பத்தி செய்து நாட்டிற்கு விநியோகம் செய்து வருகின்றோம். அந்நிய செலவாணி நாட்டை விட்டு வெளியேறுவதை நாங்கள் தடுக்கின்றோம். பால் பொருட்களை தயாரிக்கும் செயற்பாட்டிற்காக நாங்கள் வெளிநாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்வதில்லை.  எனவே பால் பொருட்களின் விலைகளைக் குறைப்பதில் எந்த அர்த்தமுமில்லை என உள்ளுர் பாலுற்பத்தி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால்மாவின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் பால்மா தயாரிப்பு சங்கத்தின் தலைவர் அரியசிறி விதானகே தெரிவித்தார்.

இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) அறிவிப்பின்படி, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் தான்  இந்த விலைக் குறைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.