ஹர்த்தாலுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

 

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்கக்கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை செவ்வாய்க்கிழமை (25)  இடம்பெறவுள்ள
ஹர்த்தாலுக்கு பல அரசியல் கட்சிகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

அதற்கிணங்க, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள  வர்த்தக சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
 
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நாளை (25) சமர்ப்பிக்கவுள்ள நிலையில், அன்றைய தினத்தில் வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பை மேற்கொள்ள தமிழ் கட்சிகள்  தீர்மானித்தன.
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரே்ஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியினர், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் நடத்திய சந்திப்பின் பின்னர், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.