இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோடர்ஸ் ஹெட்ஜில் நேற்று (13) நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2048 அபிவிருத்தி அடைந்த இலங்கையை நோக்கிய பயணத்திற்கான வாய்ப்பு இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான ஆரம்ப முயற்சியாக உலகில் இதுவரையில் எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுக்களில் பங்கேற்கும் வாய்ப்பை இளைஞர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த மாற்றத்தை இளைஞர்களே கோரினர். ஆகையால் இந்த சந்தர்பத்தை கொண்டு உரிய வகையில் பயனடைவர் என தான் நம்பவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்றிட்டமான (UNDP) இன் உதவியுடன் இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வேலைத்திட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உரையாற்றினர்.
பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள 17 துறைகளுக்கான துறைசார் மேற்பார்வை குழுக்களுக்காக பத்திரிகை விளம்பரம் ஒன்றின் ஊடாக அறிவிக்கப்பட்டு பாராளுமன்றச் செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட 18 – 35 வயதுக்கிடையிலான 550 இளைஞர்களுக்கு செயலமர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த துறைசார் மேற்பார்வை குழு செயற்படுவதோடு, திருத்தம் செய்யப்பட்ட நிலையியற் கட்டளை ஏற்பாடுகளுக்கு இணங்க முன்னெடுக்கப்படும் விசாரணைச் செயற்பாடுகளின் போது செயற்குழு தலைவர்களின் உதவிக்காக இளம் உறுப்பினர்கள் ஐவரை தெரிவுசெய்து அழைப்பு விடுக்க முடியும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு செயற்குழுவிற்குமான இளம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.