காத்தான்குடி மத்திய கல்லூரியில் 33 வருட காலமாக சேவை புரிந்து ஆசிரிய பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஹுசைன் சேர் .

 




 காத்தான்குடி மத்திய கல்லூரியில் 33 வருட  காலமாக ஆசிரியராக, பகுதித்தலைவராக, பிரதி அதிபராக என்று பல்வேறுபட்ட வகிபாகங்களை வகித்து  வந்த எமது மதிப்பிற்குரிய ஹுசைன் சேர் அவர்கள் 02.06.2023ல்  இருந்து  ஓய்வு பெற்று செல்ல உள்ளார்கள் என பாடசாலை அதிபர் எம்.ஏ.நிஹால் அகமட் தெரிவித்தார்.

02.06.1963 ஆம் ஆண்டு பிறந்த இவர் காத்தான்குடி 5 ஜாமியுள்ளாபிரீன் லேனில்  வசிக்கின்றார்.

 தனது ஆரம்பக் கல்வியை மெத்தைப்பள்ளி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை காத்தான்குடி மத்திய கல்லூரியிலும், உயர்தர கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலும் கற்றார்.

  ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு  27.12.1984 ஆம் ஆண்டு புத்தள மாவட்டத்தின் கற்பிட்டி அல் அக்ஸா  மகா வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்து தனது ஆசிரியர் சேவையை ஆரம்பித்தார்.

1988/89 கல்வியாண்டில் அட்டாளைச்சேனை  ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விஞ்ஞான பயிற்சியினை மேற்கொண்ட பின்னர் 01.01.1990 ஆம் ஆண்டில்  பயிற்றப்பட்டப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்தார்.

 அன்றிலிருந்து நீண்ட காலமாக எமது காத்தான்குடி மத்திய கல்லூரியில் கடமையாற்றிய நிலையில் 08.03.2013 இல் இடமாற்றம் வழங்கப்பட்டு புனித மிக்கேல் கல்லூரிக்குச் சென்றார்.

ஹுசைன் சேர் அவர்களின் சேவை எமது மத்திய கல்லூரிக்கு அவசியம் என கருதிய அக் காலப்பகுதியில் எமது பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய அல்ஹாஜ் யூ.எல்.ஏ.முபாறக்   அவர்களின் முயற்சியின் பயனாக  7 மாதங்களில் பின்னர் மீண்டும் இடமாற்றம் ஒன்றின் மூலம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் தனது பணியை தொடர்வதற்காக இணைந்து கொண்டார்.

38 வருட கல்விப் பணியினை நிறைவு செய்து 02.06.2023 ஆம் திகதி முதல் ஓய்வு பெற உள்ள ஹுசைன் சேர் அவர்கள்  33 வருடங்கள் காத்தான்குடி மத்திய கல்லூரியிலேயே தனது கல்விப் பணியினை ஆற்றியுள்ளார்கள்.


தனது சேவைக் காலத்தில் பட்டப் படிப்பினையும், பட்ட பின் கல்வி டிப்ளோமாவினையும்  பூர்த்தி செய்த இவர்கள்

 பாடசாலையில் விஞ்ஞானப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக மாத்திரம் அல்லாமல் பகுதித் தலைவராக மற்றும் பிரதி அதிபராகவும் தனது கடமையை சிறப்பாக இப் பாடசாலையில் ஆற்றியுள்ளார்கள்.

க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு நீண்ட காலமாக விஞ்ஞானப் பாடம் கற்பித்த இவர்களிடம் கற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கின்றனர்.

25 வருடங்களுக்கு மேல் க.பொ.த.  சாதாரண தர விஞ்ஞான பாட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் பரீட்சகராக ஈடு பட்டதுடன், அக்குழுவில்  பிரதம பரீட்சகராகவும் கடமையாற்றிய  அனுபவங்களைப் பெற்ற இவர்கள் உயர்தரப் பரீட்சை மேற்பார்வையாளராகவும் கடமையாற்றியுள்ளார்கள்.

தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சியளிக்கும் அரசின் திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டு மூன்று வாரம் இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற அந்நாட்டின் பாடவிதானம் மற்றும் பாடசாலை தொடர்பான பயிற்சியினை பெற்ற குழுவில் ஹுசைன் அவர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தனது சேவைக் காலத்தில் காத்தான்குடி மத்திய கல்லூரியில் 12 அதிபர்களின் கீழ் பணியாற்றிய ஹுசைன்  அவர்கள், பாடசாலை பல்வேறு சவால்களை சந்தித்த போதெல்லாம் பாடசாலையின் முன்னேற்றத்திற்காக தனது முழுமையான பங்களிப்பை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவரது மனைவி எம்.ஏ.எஸ்.ஹபீபா அவர்கள் ஓர் ஆசிரியராக அல் ஹிறா மகாவித்தியாலயம், மெத்தைப் பள்ளி வித்தியாலயம் மற்றும் நூறானியா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்கள்.

ஹுசைன் சேர் அவர்களின் இரு ஆண் பிள்ளைகளில் ஒருவர் றுகுனு பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழிநுட்ப பீடத்தில்  கல்வி கற்று பட்டம் பெற்றுள்ளதுடன்,
 மற்றையவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்.

இரு பெண் பிள்ளைகளில் ஒருவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையில் கல்வி கற்று பட்டம் பெற்றுள்ளதுடன் தற்போது முகாமைத்துவ  உதவியாளராக  கடமையாற்றுகின்றார்.  மற்றவர் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கின்றார்.

நீண்ட கால அனுபவம் உள்ள ஹுசைன்  சேர் அவர்கள் பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்று செல்வது  பாடசாலைக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

ஓய்வு பெற்றுச் செல்லும் ஹுசைன் சேர் அவர்களின் சேவையை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டும் எனவும்,
 ஓய்வு காலம் சிறப்பாக அமையவும், அவர்களின்  தேக ஆரோக்கியத்திற்காகவும், மன நிம்மதிக்காவும்  இறைவனை பிரார்த்திப்போம் என்றார்.