(மட்டக்களப்பு நிருபர்)
தன்னாமுனை மியானிநகர் ஹோலி இன்னோசன்ஸ் அக்கடமி முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா முன்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அதிபர் அருட்சகோதரி யு.யேசுராணி குரூஸின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் முத்துராஜா புவிராஜாவும், விஷேட அதிதியாக செங்கலடி ஜெரோம் முன்பள்ளியின் அதிபர் அருட்தந்தை வினோஜனும், கௌரவ விருந்தினராக மியானி மகளிர் விடுதியின் இயக்குநர் அருட்சகோதரி மரியா கிறேஷியா டெஸியும், கலந்து சிறப்பித்தனர்.
இவ்விளையாட்டு நிகழ்வில் மியானிநகர் அருட்சகோதரிகள் உட்பட பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து அதிதிகளினால் தேசியக் கொடி, முன்பள்ளிக்கொடி என்பன ஏற்றப்பட்டதுடன், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இதன்போது பிள்ளைகளின் ஆற்றல்கள், திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறுபட்ட மகிழ்ச்சிகரமான விளையாட்டுகளும் இடம்பெற்றன. அத்தோடு பெற்றோர்களுக்கான வினோத விளையாட்டுகளும் இடம்பெற்றன.
விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டு, அவர்கள் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.