கடலில் மூழ்கி இரண்டு பாடசாலை மாணவர்கள் பலி!


மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கருவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் கருவேப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16வயது), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன்த் (16வயது) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இவர்கள் வீட்டிலிருந்து சென்று குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.யூ.அப்துல் ஹக்கீம் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு மரண விசாரணையினை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.